சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சேமிப்பு என்பது பணத்தை செலவு செய்யாமல் வங்கியில் வைத்திருப்பது. முதலீடு என்பது நமக்கு வருமானத்தை கொடுக்க கூடியது. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த வித்தியாசம் தெரிந்தவர்கள் கூட சரியான விகிதத்தில் பிரித்துக் கொள்வதில்லை.
மொத்த தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல இந்த கட்டுரை. ஆனால் அதேசமயம் பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் பலனை விட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஏன் முதலீடு?
இன்ஃபோசிஸ் அல்லது விப்ரோ பங்கு வெளியான போது சில ஆயிரம் ரூபாய்களுக்கு அந்த பங்குகளை வாங்கி இருந்தீர்கள் என்றால், போனஸ் பங்கு பிரிப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இப்போது அதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று பங்குச் சந்தையில் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இவை கதை அல்ல முற்றிலும் உண்மை. அதேபோல மொத்த முதலீடும் காணாமல் போன கதையும் கேள்விபட்டிருப்பீர்கள்.
அதிக லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். மொத்த முதலீட்டையும் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்டால், முதலீடு செய்யலாம் ஆனால் சில விதிமுறைகளுடன் சந்தையில் பயணிக்க வேண்டும். தவிர நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் கிடைக்கிறது.
பிரித்து முதலீடு செய்க!
பங்குச் சந்தை முதலீடு தேவைதான். ஆனால் அதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் அத்தனை தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. உங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு 30 வயதாகிறது. 100 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் (100-30) 70 ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி. ஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல 70 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டாலும் ஒரே சமயத்தில் அனைத்து முதலீடுகளையும் செய்ய வேண்டாம். 70 ரூபாயை நான்காக பிரித்து நேரம் வரும் போது முதலீடு செய்ய வேண்டும்.
முதலீடா, வர்த்தகமா?
அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்பு, முதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே வித்தியாசத்தை தெரிந்துகொள்வது. சில முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிடுவார்கள். சில காலத்துக்கு / வருடத்துக்கு பிறகு அவர்கள் விற்றுவிடுவார்கள். இது முதலீடு. ஆனால் சிலர் காலையில் வாங்கி மதியம் விற்பது, மாலை விற்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் இதற்கு பெயர் வர்த்தகம். இது ரிஸ்க் மிகுந்தது. நீங்கள் காலையில் வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த பங்கு தொடர்ந்து சரிய ஆரம்பிக்கும். இன்னும் சில நாளைக்கு பிறகு லாபத்துடன் விற்கலாம் என்று முடிவெடுப்பீர்கள். ஆனால் அந்த பங்கு நீங்கள் வாங்கிய விலைக்கு மீண்டும் வரவே வராது. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் இதில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கலாம்.
போர்ட்போலியோ!
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, மொத்த முதலீட்டையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்யக்கூடாதோ அதேபோல, மொத்த முதலீட்டையும், ஒரே பங்கு அல்லது ஒரு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு துறையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது, அந்த துறை சார்ந்த பங்குகள் அனைத்திலும் சரிவு ஏற்படும். அப்போது உங்களது முதலீடு அதிகளவு சரிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் வங்கி, பார்மா, ஐடி, என்று துறை வாரியாக பிரித்து முதலீடு செய்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
தள்ளி நின்று கவனிக்க
பங்குச்சந்தை களேபரங்களில் இருந்து தள்ளி நின்று உங்கள் முதலீடுகளை செய்யுங்கள். எப்போது பங்குச் சந்தையில் உற்சாகம் மிகுதியாக இருக்கிறதோ அப்போது விற்றுவிடவேண்டும். எப்போது பங்குச்சந்தையில் பயம் அதிகமாக இருக்கிறதோ அப்போது முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட் கூறிய முதலீட்டு தத்துவம். சந்தையின் இரைச்சலில் இருந்து விலகி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பதை கண்டுக்கொள்ள முடியும். இல்லையெனில் கூட்டத்துடன் சேர்ந்து தவறான முடிவெடுப்போம்.
கடன் வாங்கி முதலீடு வேண்டாம்
பங்குச்சந்தையில் முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது என்றாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது ஆபத்தானது. உங்களிடம் இருக்கும் உபரி பணமாக இருந்தால் யாருக்கும் பதில் சொல்லத்தேவை இல்லை. ஆனால் கடன் வாங்கும் போது விட்டதை பிடிக்க மேலும் மேலும் கடன் அதிகமாக அந்த சுழலில் இருந்து வெளியே வரமுடியாமல் போய்விடலாம்.
மறு ஆய்வு
தங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறது. வீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லை. முதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறு. பங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம். செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.
எதில் முதலீடு?
பங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிர, எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.
நீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்ல, தொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள், அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.
சிறு துளி பெருவெள்ளம் போல சிறு சேமிப்பு என்பதை முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம்.இதை குறித்து இன்னும் எளிமையாக அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே..!!
No comments:
Post a Comment