பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை..
பிரச்சினை இல்லா மனிதனும் இல்லை. தீர்வுகள் இல்லா பிரச்சினையும் இல்லை.
எல்லா குழப்பங்களுக்கும் குமறல்களுக்கும் தற்கொலை என்றும் ஒரு நல்ல தீர்வு அல்ல. தற்கொலைக்கு இருக்கும் தைரியம் வாழ்வதற்கு இல்லாமல் போவது தான் வேதனையான ஒன்று. கடலளவில் மனிதர்கள் உண்டு ஒருவர் கூடவா உங்கள் பிரச்சினைக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.? பேசுங்கள் பேசி தீராத துயர் என்று எதுவும் இங்கில்லை. மனம் குழம்பும் வேலையில் யாரிடமாவது பகிருங்கள். மனம் ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல. அனைத்தையும் சேகரித்து விட்டு அது மட்கிப் போகும் வரை காத்திருப்பதற்கு? வாழ்க்கையின் அருமையும் அதற்கான புதிர் நிறைந்த தேடலும் அதற்கான வழியையும் தேர்வு செய்வதில் தவறி விடுகின்றோம்.
பெரும்பாலும் தவறு தப்பு இதற்கான வேறுபாடே தெரியாமலே கடந்து வருகின்றோம். தெரியாமல் செய்வது தவறு தெரிந்தே செய்வது தப்பு. இதற்கான பொருள் தெரிந்தால் வாழ்க்கை எளிதானது தான்.
பல மேடைகளில் பல தருணங்களில் பலராலும் பல நம்பிக்கை விதைகளை விதைத்திட முடியும். ஆனால் அவற்றில் சில விதைகளே விருட்சமாக வளரும். அனைவரும் சாதாரண மனிதர்கள் தான். ஆனால் சாதாரண மனிதர்களின் மரணத்தை காட்டிலும் திரையில் இருப்பவர்களின் வாழ்க்கையும் மரணமும் பல இரசிகர்களின் முடிவாக கூட இருக்கலாம். காரணம் காசு கொடுத்து பார்க்கும் படத்தில் தலைவனையும் நம்பிக்கையும் வாழ்க்கையும் தேடும் ஆட்டு மந்தைகள் அதிகம் நிறைந்த சமூதாயத்தில் வாழ்கின்றோம்.
ஊரோடு ஒட்ட ஒழுகல் என்று வள்ளுவர் சொன்னார். ஆனால் இங்கு மனிதனுக்கு மனிதனே துணையில்லாமல் ஏதோ ஒரு மெத்தன போக்கில் ஒரு வாழ்க்கையில் வாழ்ந்துக் கடந்து கழிக்கிறோம்.
இருக்கும் வரை உதவுவதற்கு ஒருவர் வர மாட்டார்கள். ஆனால் மரணம் வந்து விட்டால் உடனே வாட்ஸ்சப் முகநூல் என்று சமூகத்தளத்திலும் குறுஞ்செய்தியும் அழுகை ஓலங்களும் குறைவில்லாது இருக்கும். ஆனால் அதே வாட்ஸ்சப் முகநூலில் பல முறை உதவியை கேட்டு இருப்பார்கள். அப்போது ஏளனமாக இருந்துவிட்டு இப்போது ஆர்.ஐ.பி என்று நிலைபாட்டுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதுவரை அவரும் அவருடைய எண்களும் புகைப்படங்களும் ஒரு சேமிப்புக் கிடங்கு போல இருக்கும்.
மரணம் வரை தெரிவதில்லை இங்கு யாரை நம்புவது ? எதற்கு ஓடுகிறோம்? ஏன் உழைக்கிறோம்? ஏன் உறங்குகிறோம்? எதற்கு சாப்டுகிறோம் என்று பல கேள்விகள் எதற்கும் விடையில்லை.. விடைக் காணவும் முயல்வதும் இல்லை..
தைரியமான மனிதர்களை கூட தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு மனித மனமும் வார்த்தையும் வாழ்க்கையும் ஏன் இவ்வளவு கரடுமுரடாக இருக்கிறது ?
யாகாவாராயினும் நா காக்க.. அன்பை வெளிப்படுத்த தயாங்காதீர்கள். தேடும் போது கிடைக்காத எதுவும் தேடாத போது கிடைத்தால் எந்த பயனும் இல்லை.
வாழ்க்கை ஒரு முறையே. பிறந்தோம் இறந்தோம் என்பதை கடந்து வாழ்ந்தோம் என்று வாழ்க்கையை இரசித்து முடிப்போம்.
தற்கொலை தான் எல்லா பிரச்சினைக்களுக்கும் தீர்வு என்றால் எல்லா மனிதர்களும் நொடிக்கு நொடி தற்கொலை தான் செய்துக் கொள்ள வேண்டும்.பிறகு பிரபஞ்சம் முழுவதும் அமைதி பூங்கா மட்டுமே இருக்கும்.எந்த ஒரு செயலாக இருந்தாலும் முடிவாக இருந்தாலும் ஒருமுறை பலமுறை யோசிப்பது தவறில்லை.அதனால் நேரங்கள் விரையம் ஆனால் கூட தவறில்லை. ஆனால் தற்காலிக பிரச்சினைக்கு வாழ்க்கையை முடித்து விடாதீர்கள். வீட்டுக்கு வீடு வாசல் படி போல மனிதனுக்கு மனிதன் பிரச்சினைகள் ஓராயிரம் உண்டு என்பதை நினைவில் கொள்க.
சோதனைகளே சாதனையின் தூண்டுகோல். பேசுங்கள் பகிருங்கள் முயற்சிச் செய்யுங்கள். தற்கொலை எதற்கும் முடிவு அல்ல. கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம் தொடரும்...
5 comments:
Correct da
Super
👏👏
அருமையான பதிவு அக்கா...
Such a wonderful words da. Realistic lines. Spread love and help others. Share your valuable time with others and feel free.
Really good one..such an inspirational words...this is wat everyone needed... everytimes..!!! Keep doing..and save some others lives by ur valuable words..!!
Post a Comment