#படவிமர்சனம்
படம் : பாவக் கதைகள்
கதைக்களங்கள் : உடலும் மனமும், மனித உணர்வுகளும் புரிதலும்.
படம் 1 ; தங்கம்
இயக்குநர் : சுதா கொங்கரா
கதைக்கரு: காதலுக்கு பால் வேறுபாடும் மத வேறுபாடும் இல்லை.
காலங்காலமாக காதல் என்றாலே எதிர்ப்புகள் வெறுப்புகள் மட்டுமே அதிகமாக இருக்கும். அதுவும் கலப்புத் திருமணம் மட்டுமல்ல கலப்புக் காதல் கூட இன்று வரை சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்து - முஸ்லீம் இரு மதத்தினரையும் பல்லாண்டு காலமாக எதிராளியாகவே பார்க்கப்படுக்கின்றனர். இரு வேறுப்பட்ட சமூகத்தில் காதல் என்பது தீண்டத்தகாத செயலாகவே இருக்கின்றது. எவ்வளவு பகுத்தறிவும் திறன் இருந்தாலும் தான் என்றும் தன் குடும்பம் என்றும் வரும் போது அவை அனைத்து காற்றில் கலந்த தூசுகள் ஆகின்றன. இக்கதையில் புதுமையான ஓர் உணர்வை உணர்ந்தேன். சுதா கொங்கரா ஆண் இயக்குநர்கள் மத்தியில் பெண்ணாக தனது தொடர் படைப்புகள் மூலம் தனக்கென்று ஓர் இடத்தை நிரப்பிக் கொண்டே இருக்கிறார் என்பது திண்ணம். ஆண் பெண் இவர்களின் உணர்வு பொதுவாக நம்மால் உணர இயலும். மூன்றாம் பாலினத்தின் உணர்வை என்றுமே நம்மால் உணர இயலாது காரணம் அவர்கள் அருவருக்கத்தக்கவர்கள் என்ற பிம்பமே காரணம். இப்படத்தில் காதர் என்ற கதாபாத்திரம் பிரமிக்க வைத்தது. சில இடங்களில் கண்ணீருக்கு கூட இடம் இருந்தது. பிறப்பு யாராலும் தீர்மானிக்க இயலாது. ஆணாக பிறப்பதும் பெண்ணாக பிறப்பதும் அல்லது மூன்றாம் பாலினமாக பிறப்பதும் இயற்கையை சார்ந்ததே. எந்த பாலினமாக இருந்தாலும் உணர்வு என்பது ஒன்றே. மதத்தையும் மனதையும் ஒரு சேர அமைத்து பார்வையாளர்களை கவர்ந்து விட்டார் இயக்குநர் என்று கூட சொல்லலாம். இன்று வரை மதம் என்பதை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தி வருக்கிறார்கள் என்பதும் அதனை உணர்வுகளோடு பயன்படுத்தி உறவுகளை சிதைக்கிறார்கள் என்பதும் வேதனையான ஒன்றாக இருக்கிறது. தங்கம் ஓர் வரைப்படாத காதல் ஓவியம். ஓவியனுக்கு மட்டுமே உரித்தான கற்பனை சுரங்கம்.குழுவினருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
படம் 2 : லவ் பண்ணா உட்டுரு
இயக்குநர் : விக்னேஷ் சிவன்
கதைக்கரு: காதல் காமத்தை கடந்தது.
பொதுவாக காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே உரித்தானது என்பார்கள். ஆனால் இன்றைய சமூகத்தில் அப்படி இல்லை. காதல் உணர்வு யாருக்கு யார்மீது வேண்டுமென்றாலும் வரலாம். அது தவறில்லை. காதல் என்பது உணர்வுகள் புரிதல்கள் விருப்பங்கள் ஆசைகள் என பலவற்றை உள்ளடக்கியது. சமீபத்தில் இந்திய அரசியல் சட்டம் 377 பிரிவின் படி ஓரினச் சேர்க்கை என்பது அவரவர் விருப்பத்தை சார்ந்தது, பிறருக்கு பாதிப்பு இல்லாத வகையில் இருந்தால் அது தவறில்லை என்ற ஆணையை பிறப்பித்தது. ஓரினச் சேர்க்கை என்பது இன்று நமக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் நம் வரலாற்றில் தலைச் சிறந்து விளங்கிய மாமேதைகளில் சிலரும் ஓரினச் சேர்க்கையாளர்களே என்பது அறியப்பட்டு மறைக்கப்பட்ட உண்மையே. இப்படத்தில் ஜாதிய வெறியர்களின் சுய கர்வம் ஓர் புறமும் அக்கூட்டத்தின் தலைவரின் இரட்டையர்களான மகள்களின் காதலும் இன்றை சமூகத்தில் பேச வேண்டிய ஓர் கதைக்களமே. ஆண் சமுதாயம் பெண்களை இழிவுப்படுத்த பொதுவாக தே**யா பெயரை பயன்படுத்துவார்கள். இதனை பெண் ஆண்களை நோக்கி பேசினால் அது எப்படி தவறாகும் ? ஓர் பெண் ஆண்களால் தான் அப்பெயருக்கு தீனியாகிறாள். விக்னேஷ் சிவனின் இக்கதை பெண் சமூகத்திற்கு தெரிந்துக் கொள்ள வேண்டிய ஓர் களமாக அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. லவ் பண்ணா உட்டுரு இல்லன்னா ஒன்னு ஓடி போவாங்க இல்லன்னா செத்து போவாங்க இன்னும் அட்வான்ஸாக கொள்ளப்படுவாங்க.
படம் 3 : வான்மகள்
இயக்குநர் : கௌதம் வாசுதேவ் மேனன்
கதைக்கரு: பெண்களின் இரு கால்களுக்கு இடையில் தான் அவளின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.
பெண்ணியம் பற்றி காலங்காலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி போட்டிப்போட்டு மேடைப்போட்டு பேசி வருக்கிறார்கள். அது என்னவோ எனக்கு பெண்ணியம் பேசுபவர்களை கண்டால் சற்று சிரிப்பு வரும். இச்சமூகத்தில் ஆண் பெண் இருவரும் சரி பாதி என்ற கருத்தை மறந்து சரி நிகர் என்ற கருத்து மேலோங்கியதன் விளைவு தான் இன்றைய பெண்ணியம் பலருக்கும் புரியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. கௌதம் மேனனின் கதைகள் என்றுமே தனித்துவமானது பொதுவாக அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட பலவற்றை அவரின் கதையில் பயன்படுத்தி நம்மையும் அக்கதையில் ஊடுருவ செய்வார்.இக்கதையிலும் அப்படியே பெண்மையும் ஆண்மையும் பெற்றோர்களின் மனநிலையும் சமூகத்தின் பார்வையும் ஒரு சேர புரிய வைத்துள்ளார் என்று கூட சொல்லலாம். இன்றைய காலத்தில் பாலியல் பலாத்காரம் என்பது ஒரு ரெண்டிங் என்று கூட சொல்லலாம். ஆம் தனது காம இச்சைக்கும் பழி வாங்கும் இச்சைக்கும் ஆண்கள் பெண்களை மட்டுமல்ல துளைகள் இல்லாத சிறுமிகளை கூட தனது பிறப்பு உறுப்பால் சிதைத்து விளையாட்டுகிறார்கள். இதில் என்ன ஓர் விநோதம் என்றால் இது போன்ற செயலுக்கு அரசும் அரசியலும் பாதுகாப்பு தருவது தான். எவ்வளவு கேவலமான சமூகத்தில் பெண்ணியம் பேசப்படுகிறது என்று நினைத்தால் சிரிப்பு மட்டுமே வருகிறது. இக்கதையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தனது 12 வயது மகளையும் தங்கையும் ஆன ஓர் சிறுமியை கையாளுவது இன்றைய பல குடும்பங்களின் தைரியம் விதைக்கும் செயல் என்று சொன்னால் கூட மிகையே. பறக்க நினைக்கும் பெண்களின் சிறகுகளை வெட்ட நினைக்காதீர்கள். அவள் வானை சுற்றியுள்ள வட்டத்தை கடந்தும் பறந்து செல்ல இயலும் அவளை சமூகத்தின் பார்வையில் ஒடித்து விடாதீர்கள். பட்டம் போல பறக்கட்டும்.அப்பட்டத்தின் நூலாக பெற்றோர்கள் இருந்தால் சாலச்சிறந்தது. திசை மாறும் பட்டத்தை தேவைப்படும் போது சரிசெய்ய உதவும் நூல் போல பெற்றோர்கள் இருக்க வேண்டும். பட்டத்தை தீண்ட வேறு பட்டம் வந்தால் அதனை அறுக்கும் மாஞ்சா போல் சமூகம் இருந்தால் பெண்மை ஆண்மையின் துணையுடன் சுதந்திரமாக பறக்கும். வான்மகள் பறப்பாள்.
படம் 4 : ஓர் இரவு
இயக்குநர் : வெற்றி மாறன்
கதைக்கரு : சுய கௌரவம் மத்தியில் ரத்தப் பாசம் எதற்கு ?
அட போங்கடா நீங்களும் உங்க சுய கௌரவமும் என்ற சலிப்பே அதிகம் வருகிறது.நீ ஓர் ஆண் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஓர் பெண்ணின் அனுமதி வேண்டும் என்பதையே மறந்து விட்டு ஆணாதிக்க வர்க்கத்தில் சுற்றித் திரியும் பைத்தியக்காரத்தனத்தை கண்டால் வேதனையாக இருக்கிறது. காதல் தவறில்லை. காதலித்தால் வீட்டில் சொல்லுங்கள் பெற்றவர்களின் ஆசைப்படி ஆசிப்பெற்று திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று பேசுபவர்களை கண்டால் கோபம் தலைக்கு ஏறுகிறது. என்ன தான் படித்த பெற்றோர்களாக இருந்தாலும் காதல் என்று வந்து விட்டால் சாதி மதம் என்பதையே அடிப்படையாக வைத்து ஒன்று எமோஷனலாகவோ அல்லது பயம் காட்டியோ நம்பிக்கையில்லாமல் பிரித்து வைக்கவே முயல்கின்றன. இப்படி இருக்கையில் எப்படி தான் காதலித்தால் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் சொல்ல இயலும். ? காதல் இல்லாத உயிர் உண்டா இப்பூமியில் ? காதல் என்பது உணர்வு புரிதல் மௌனம் பாதுகாப்பு நம்பிக்கை இதனை எளிதாக யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. இக்கதையில் காதலித்து திருமணம் செய்து நிறை மாதமாக இருக்கும் மகளை பாச வலையில் சிக்க வைத்து தனது உதிரத்தில் பிறந்த மகள் என்பதை கூட உணராமல் தனது வறட்டு சுய கௌரவத்திற்காக தன் மகளையே விஷயம் வைத்து கொள்ளும் தந்தை. இன்றைய காலத்தில் இன்றும் இது போன்ற பெற்றோர்கள் மலிந்து உள்ளார்கள் என்பது மிகையே. ஓர் இரவு, பந்தம் என்ன பாசம் என்ன இங்கு யாவும் சுயநலமே சுய கௌரவமே. வெற்றி மாறனின் சுருக்கமான சமூகத்தை நோக்கி சாட்டை நன்றாக வீசி விட்டார்.
நான்கு கோணங்கள் நான்கு காதல்கள் நான்கு புரிதல்கள் நான்கு வகையில் பெண்களின் மௌன சப்தங்கள் நான்கு இயக்குநர்கள் நான்கு விதங்களில் நறுக்கென்று பட்டைய கிளப்பி முகத்தில் அறைந்து பேசி விட்டார்கள். கேள்விகள் பலவற்றை நம்முள் விதைத்து விட்டார்கள். விடைக் காண முயல்வோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மனநிறைவான படம். காதல் புனிதமானது காதலியுங்கள். காதலை ஆதரியுங்கள். காதல் பேசும் காதல் அழுகும் காதல் சிரிக்கும் காதல் பாதுக்காக்கும் காதல் மௌனமாகும் காதல் புரியும் காதல் கற்பனைக்கும் எட்டாத காவியம்.
காதலுக்கு உருவமில்லை நிறமில்லை அழகில்லை. புரிதலே வாழ்க்கை.நன்றி மீண்டும் வேறொரு படத்தின் விமர்சனத்தில் தங்களை சந்திக்கிறேன்.
கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம் தொடரும்...,
நம்பிக்கையுடன் வைசாலி செல்வம்.👣📚🌴😊🙏
3 comments:
Super Ka especially third part faac aa soli irukega...👍🏻keep going Ka...
Solla vaarthaigal illai ..
கண்களில் நீர் மட்டுமே !
சிறப்பாக உண்மையை உணர்த்தி உள்ளார்கள்
Post a Comment