Monday 3 May 2021

நிழலின் தேடல்...!


 

#நூல்விமர்சனம் 

நூல் : நிழலின் தேடல்

ஆசிரியர் : கவிஞர் இரா. ரகு

பதிப்பகம்: வேர்களைத் தேடி 

நிழல் + தேடல் + பயணம் = வாழ்க்கை. பிறந்ததில் இருந்து இறப்பு வரை யாரோ ஒருவரின் நிழலில் தான் இருக்கின்றோம். யாருடைய உதவிகளும் துரோங்களும் இல்லாமல் யாரும் முன்னேற முடியாது என்பது மிகையே. வாழ்க்கையின்  தேடல் மட்டுமே கடைசி வரை விடை தெரியாது என்பதால் நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் சோதனையாகவும் பல நேரங்களில் சுவாரசியமாகவும் சில நேரங்களில் சாதனையாகவும்  இருக்கின்றது. நிழலின் தேடல் இந்நூல் ஒரு புதிர் என்று கூட சொல்லலாம். ஆசிரியர் பெரியார் வழி சிந்தனையாளர் என்பதால் பகுத்தறிவு மேலோங்கி சிந்திக்க வைத்துள்ளது. நிலவும் உண்மைகளுக்கு கதாபாத்திரங்கள் அமைத்து நாடகம் போலவே கதைகளம் அமைந்து இருந்தார். அன்று அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்றார்கள்?  பிறகு பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி புத்தகத்தை கொடுத்து பாருங்கள் என்று ஒரு குரல் ஒளித்தது. அதனை தொடர்ந்து பல குரல்களும் சேர்ந்தே ஒலித்தது. பாரதியார் முதல் பெரியார் வரை எத்தனையோ கவிஞர்கள் தலைவர்கள் பெண்களின் கல்வி குறித்தும் பெண்களின் சம உரிமை குறித்தும் குரல்கள் எழுப்ப ஆரம்பித்தனர். இன்றும் நம் நாட்டில் மலிந்து காணப்படுவது சாதி வெறி. சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றார் பாரதி. தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் சாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். இவர்களை போல பலரும் சாதி மதம் வேறுபாடுகளை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஆனால் இன்றும் ஆணவக்கொலை என்று பெயரில் கொலைகள் வழக்குகள் காதல் பிரிவுகள் எண்ணிலடங்கா செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. எவ்வளவு படித்தாலும் எவ்வளவு அனுபவம் பெற்றாலும் சாதி மதம் மொழி இவைகளின் அடிப்படையில் பிளவுகளும் பிரிவுகளும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.  ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை மறந்த மூடர்கள் தான் அதிகம். இந்நூலில் வரும் கயல்விழி கதாபாத்திரம் ஒவ்வொரு நாளும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்பதை விட சவால்கள் என்று சொன்னால் மிகையே. சிறுவயதில் இருந்து சுட்டிதனம் நிறைந்த ஒரு பெண் அவளின் காதலையும் காதலனையும் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட இல்லாதவளாய். மீறியதால் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலன். காதலின் பெருந்துயர் காதலுக்குரியவர்களில் ஒருவர் மாண்டு ஒருவர் மீண்டு எஞ்சிய இருக்கும் நினைவுகள் தான் பெருந்துயரிலும் பெரிது. நினைவுகளை அழிக்கவும் முடியாமல் கடக்கவும் முடியாமல் பிடிக்காத வாழ்க்கையில் வாழும் பெண்களின் மனநிலை கொடிதினும் கொடிது. சமைப்பதும் வீட்டை பராமரிப்பதும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் நலம்பேனுவதும் அலுவல் வேலைகள் பார்ப்பதும் இடையில் மகளாக மருமகளாக தாரமாக தாயாக இப்படி பல பரிமாணங்களில் சிரித்தும் சகித்தும் முட்களுக்கு நடுவில் பூக்கும் ரோஜாவை போல தான் பெண்களின் வாழ்க்கை. அதனை வெகு அழகாக கையாண்டு இருந்தார் ஆசிரியர். காதலுக்கு மொழியில்லை மதமில்லை சாதியில்லை ஆனால் மனமுண்டு பிரயமுண்டு தேடலுண்டு உணர்வுண்டு என்பதை மற(றை)ந்(த்)து விடுகிறார்கள். காதல் ஒன்றும் தவறில்லையே. அது ஒருமுறை தான் வர வேண்டும் என்பது கூட கட்டாயமில்லையே. காதலில் காதலர்கள் மட்டுமே தோற்கின்றனர்.காதல் என்றுமே தோற்பதில்லை. ஒருமுறை ஒரு தோல்வியை சந்தித்தால் பிறகு காதலில்லை வாழ்க்கையில்லை என்று பொருளில்லை. ஆனால் அடுத்து அமையும் வாழ்க்கையில் காதல் இல்லை என்றால்...??  கயல்விழியின் நிழல் போல தான் பெண்களுக்கு தன்நிழல் மட்டுமே உண்மை தோழனாக காலம் முழுவதும் துணைவருகிறது. கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள் நினைவுக்கு வந்தது "கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம், தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்" . நம்மில் சிலரும் இப்படிதான். வளர்ந்து விட்டது நாகரீகம் ஆனாலும் வளரவில்லை மனிதனின் மூளை. அழியவில்லை சாதி மத மொழி கோட்பாடுகள்.இந்நூல் நம்மை பல இடங்களில் நேரடியாக கேள்விகள் மூலம் தாக்கும் என்பதும் மிகையே. நேரம் போனது கூட தெரியவில்லை இந்நூலை படிக்கும் போது. இந்நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைக்கையில் யோசித்தேன் காரணம் இந்நூலின் ஆசிரியரின் அவரது பார்வையில் இந்நூலை எழுதி இருக்கிறார். ஆனால் எனது புரிதல் பெண்களின் ஒருவராக இருக்கிறது. சிந்தனைகள் முரண்பாட்டால் ஆசிரியர் கேள்விகள் தொடுத்து விடுவாரே என்று நினைத்தேன். பரவாயில்லை எதற்கும் தயார் என்றே எழுதி விட்டேன். ஆசிரியர் எனது ஆருயிர் அண்ணன் ரகு. பிழைகள் செய்தால் தலையில் கொட்டி திருத்த முயலும் பாசமிகு அண்ணன். நூலுடன் நானும் பயணித்த அனுபவம் நிறைவாக இருந்தது.

நன்றி.

வைசாலி செல்வம், மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும். 

பின் குறிப்பு;

எப்போது பெயர்களின் பின்பு சாதிகளின் அடையாளமும் மதங்களின் அடையாளமும் இல்லாமல் இருக்கிறதோ அதுவே முழுமையான மனித இனம் உருவாகி உள்ளது என்பதை மிகைப்படுத்த இயலும். பெண்களை காதலிக்கும் போது அவளின் மனதையும் சேர்த்தே காதல் செய்யுங்கள். வாழ்வை வென்றுவிடலாம்.அன்பால் இயங்குகிறது பூமி.




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் அருமை...

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...