நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்...
நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலிகமாக மீட்டெடுக்கவும் இப்படம் துணை நின்றது என்பது மிகையே. பொதுவாக பயணங்கள் தொடர்பான நூல்களோ படங்களோ எனக்கு ஆர்வம் மிகுதி. அதன் வரிசையில் ஏராளமான படங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக கடந்து விட்டது. நான் விமர்சனம் எழுத நினைத்த படங்களும் மன அழுத்தத்தின் காரணமாக எழுத முடியாமல் போயிற்று.
இந்த படம் என்னுள் இருந்த பல கேள்விகளுக்கு பதிலளித்தது. பிறப்பு எவ்வளவு அழகான இன்பமோ அதைவிட வலியான துன்பம் மரணம். நமக்கு நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இவர்களின் மறைவு கூட நாம் இரண்டாவது மனிதர்கள் போல கடந்து விடுவோம். ஆனால் நகமும் சதையும் போல ஒன்றாக வளர்ந்த சகோதர சகோதரிகள் அம்மா அப்பா இவர்களின் பிரிவு நம்மால் எளிதாக ஏற்று கொள்ள முடியாத ஒன்று. அதுவும் யாரும் உதவிக்கு இல்லாத அந்த கணத்த நிமிடங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மற(று)க்க முடியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் ஆயிரம் அறிவுரைகள் சொல்லலாம். ஆனால் அதே நிலையை நாம் நமது வாழ்வில் கடந்து வரும்போது அது கடினமாக இருக்கும். சிலருக்கு எளிதாகவும் இருக்கலாம்.
அயோத்தி இவ்வளவு நாள் எனது ஆழ்மனதில் இருந்த அந்த இறுக்கம் என்னை வித்தியாசமாக உணர வைத்தது. உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தை இயக்குனர் ஆர்.மந்திரமூர்த்தி அவர்கள் கண்ணுக்கும் மனத்திற்கும் உணர்வுக்கும் மனிதத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் மனிதாபிமானத்தையும் மீட்டெடுக்க உதவியுள்ளார். அழுகை என்பதை கடந்து மொழி தெரியாத ஊரில் நம்முடன் வாழ்ந்த ஒரு உயிர் இறந்து சடலமாக இருக்கும் நிலையின் வேதனையை யாராலும் உணர்ந்திட முடியாது. இப்படத்தின் உட்கரு மனிதாபிமானம். ஆனால் இப்படத்தில் கோபம்,பாசம்,பரிவு,காதல்,புரிதல்,பிரிவு,ஆண் ஆதிக்கம், எதிர் கொள்ளும் திறன்,முடிவு எடுத்தல் என பல சிந்தனைகளையும் உட்கருவாக தழுவியது என்பது திண்ணம். இன்றைய காலக்கட்டத்தில் உதவி என்பது கூட விளம்பரமே. எதிர்பார்ப்புகள் அற்ற உதவி என்பது இன்று வரை ஒரு விடை தெரியாத புதிர் தான். ஒரு சில படங்கள் பெரிய அளவில் பேசப்படுவது இல்லை. காரணம் அதை யார் இயக்குகிறார்? நடிகர்,நடிகை இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது எல்லாம் கடந்து தான் அப்படத்தின் வெற்றி இருக்கும். உட்கரு இல்லை என்றாலும் பெரிய நடிகர்கள் நடிகைகளின் படங்கள் பெரிய அளவில் பேசப்படும். அயோத்தி போன்ற பல படங்கள் இங்கு பெரிய அளவில் பேசப்பட வில்லை என்பது ஆதங்கமாகவே இருக்கிறது. அயோத்தி படத்தில் மேலும் இணைவதற்கு அதன் பிண்ணனி இசையும் ஒரு பெரிய காரணம். என்.ஆர்.ரகுநந்தன் அவர்களின் இசையும், சாரதி அவர்களின் காற்றோடு பட்டம் பாடலின் ஒவ்வொரு வரியும், பிரதீப் குமார் அவரின் குரலில் கேட்கும் போது மனதில் ஓர் அமைதியும் மௌன சப்தமும் கண்களை ஈரமாக்கியது என்பது மிகையே. ஒரு திரைப்படம் என்பது பொழுதுபோக்கு மட்டுமே அடிப்படையாக கொண்டதாக இருக்க கூடாது. சமூதாய கடமையும் சற்று சார்ந்தே இருக்க வேண்டும். காமம் காதல் நகைச்சுவை இது மட்டுமே கருவாக இருக்கக்கூடாது.
அயோத்தி வெறும் படம் மட்டுமல்ல. மனிதன் தொலைத்த மனிதாபிமானத்தை மீட்டெடுக்க சற்று உதவும் பாடம்.
"நீரிலே பூத்தாலும்
பூக்களின் வாசங்கள்
தண்ணியிடம் சேர்வதில்லையே
என்ன விதியோ?....
காற்றோடு பட்டம் போல
இந்த வாழ்க்கை தான்
அட யார் சொல்ல கூடும்
அது போகும் போக்க தான்.....!
இரண்டு முறை பார்த்து விட்டேன். ஆனால் இன்னும் அந்த காட்சிகள் கண்ணையும் மனத்தையும் விட்டு மறையவில்லை. சில படங்கள் மட்டுமே நம்மை தூங்க விடாமல் செய்யும். அப்படி செய்யும் படங்களே சிறந்தது. அயோத்தி, மொழிகளையும் மதங்களையும் இனங்களையும் கடந்த உணர்வு பூர்வமான ஒரு திரைப்படம். ஜி5 (zee5)-ல் வெளியாகியுள்ளது. பார்க்காதவர்கள் பார்க்கவும். பணத்தை விட மனிதாபிமானம் பெரிது. ஆனால் இன்று அதற்கும் ஒரு விலை உள்ளது என்பது வேதனை.
நன்றி. மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தின் விமர்சனத்தில் பார்க்கலாம். வைசாலி செல்வம்.
பின்குறிப்பு: இது என்னுடைய தனிப்பட்ட விமர்சனம். ஒவ்வொருவருக்கும் உட்கரு மாறுபடலாம்.
No comments:
Post a Comment