திரைப்படம் : பகாசூரன்
எழுத்து (ம) இயக்குநர் : மோகன் ஜி. சத்ரியன்
இசை : சாம்.சி.எஸ்
கதைக்கரு: இணையவழிப் பாலியல் தொழில்
இன்றைய காலத்தில் வீட்டை மட்டுமல்ல கைபேசி முதற்கொண்டு பூட்டு போட வேண்டிய நிலை உள்ளது. களவு கலவி கல்வி மெல்லிய நூலிழை வித்தியாசம் தான். கல்வி சரியாக இருந்தால் மற்ற இரண்டும் சரியாக இருக்கும். குறிப்பாக பாலியல் கல்வி இன்றைய நவீன பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிக அவசியம். பிள்ளைகளிடம் இருந்து தப்பிக்க இன்றைய நவீன பெற்றோர்கள் உபயோகிக்கும் ஒரு விளையாட்டு பொருட்களில் மிக முக்கியமானது கைபேசி. ஆனால் இதன் விளைவு சில நாட்கள் கடந்து தான் தெரியும். எவ்வளவு முற்போக்கு சிந்தனையுடன் இருந்தாலும் தனக்கு என்று ஒரு நிலை வரும் போது அத்தனையும் பிற்போக்காக மா(ற்)றிவிடும். என் பிள்ளை கைபேசியில் பூந்து விளையாடும் எனக்கே தெரியாத பலவற்றை என் பிள்ளை சொல்லும் அப்படின்னு இன்றைய நிறைய வீடுகளில் கேட்பதுண்டு. இப்படம் முற்போக்கு காலத்தில், சில பிற்போக்கு சிந்தனையும் அங்கு அங்கு காணப்படும். ஆனால் இப்படத்தில் காதலுக்காக, காதலுனுக்காக, வறுமைக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மையமாக வைத்து குற்றவியல் படமாக நகர்கிறது.
இப்படத்தில் வரும் சம்பங்கள் மிகையே. என் வாழ்வில் நான் சந்தித்த சில பெண்களும் ஆண்களும் இணையவழி பாலியல் ரீதியாக சிக்கிக் கொண்டதை பார்த்திருக்கிறேன். எனக்கு முகநூல் அறிமுகமான காலத்தில் இதுபோன்று நிறைய குழுக்களில் என் அனுமதியின்றி சிக்கிய நாட்களும் உண்டு. அப்போது எனக்கு இணையம் வழியாக அறிமுகமான ஆண் நண்பர் யோசுவா என்பவரின் உதவியுடன் மீண்டேன். இன்றும் இது போன்ற அத்துமீறல்கள் உள்ளன. பார்ன் ( porn or adult) இணையம் இன்றும் இருக்க தான் செய்கிறது.
இப்படத்தில் செல்வராகவன் முதல் பாதியில் பழிவாங்கும் வெறியையும் இரண்டாம் பாதியில் தந்தையின் பாசத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நட்டியின் தேர்ந்த நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறது. காவல் ஆய்வாளராக வரும் தேவதர்ஷினி, பாலியல் தொழில் தரகர்களாக வரும் லயா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கின்றனர்.மிரட்டல், வற்புறுத்தலின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ அவமதிக்கும் வகையிலோ வசனமும் காட்சியும் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். வறுமையால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் விளைவுகளை அறியாமல் பதின்பருவத்தினர் ஸ்மார்ட்போனில் மேற்கொள்ளும் அந்தரங்கச் செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இந்த விஷயத்தில் பெற்றோர் அவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருப்பது இந்தப் படத்தின் குறைகளை மறக்க வைக்கிறது.
பாலியல் கல்வி என்பது முதல்பெண் எடுப்பதை காட்டிலும் மிக முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். நாளைய தலைமுறைக்கு நம் தலைமுறைக்கு எப்படிப்பட்ட சமூகத்தை காட்டவேண்டும் என்பது நமது கடமையாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளை பெறுவது வரமாக இருந்தாலும் அவர்களை இச்சமூதாயத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்படுவது என்பது பெரிய சவாலாகவே உள்ளது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது அவ்வப்போது கவனியுங்கள். நண்பர்களிடம் இருக்கும் நம்பிக்கையும் தோழமையும் பாதுகாப்பும் இரகசியமும் உங்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதில் தான் பெருமை என்பதை உணர வேண்டும்.
Good touch bad touch don't touch இதற்கு முன்பு sex intimacy trust loyal care love friendship LGBTQ பற்றி சொல்லி கொடுங்கள். மதிப்பெண்கள் பெற்றுத்தந்த பெருமையை விட நம் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் நம்பிக்கைக்குரிய மனிதனாக வளர்ப்பதே பெருமை.
குறிப்பு : இது என்னுடைய தனிப்பட்ட கருத்துகள். ஒவ்வொருவருக்கும் உட்கரு மாறுபடலாம்.
பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம். குழந்தைகளுக்கான நேரத்தை செலவிடுங்கள் தோழமையுடன் பழகுங்கள். விலையுயர்ந்த திறன்பேசியை பரிசளிப்பது மட்டும் பெற்றவர்களின் கடமை இல்லை. அதன் மூலம் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் தான் பெரிய கடமை.
நன்றி. மீண்டும் ஒரு நல்ல படத்தின் விமர்சனத்தில் சந்திக்கிறேன்.
No comments:
Post a Comment