Sunday, 16 May 2021

தப்பட் ( Thappad ) ..!


 #படவிமர்சனம் 

#தப்பட்🎬 #thappad_movie_review_in_tamil

சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம். இன்று வரையிலும் பல விவாதங்களில் இருந்து வருகிற ஒரு கதைகளம். விமர்சனம் செய்வதற்கு முன்பு  படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் இவ்வளவு துணிச்சலான கருவை இரண்டரை மணி நேரம் சிறிய சிதறுதல் கூட இல்லாமல் கதையும் நம்மையும் மிகு சிறப்பாக நகர்த்தியிருப்பார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் வேற லெவல் என்று சொன்னாலும் மிகையே. ஒவ்வொருவரும் தனது கதாபாத்திரத்தில் நீங்காமல் வசித்தார்கள் என்றே சொல்லலாம். அருமை அருமை. 

படத்தின் தலைப்பு  தப்பட் தமிழில் ஒரு அறை ஆங்கிலத்தில் a slap என்று பொருள். ஒரு அறை தான் அந்த அறை அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது என்பதே இப்படத்தின் மையம். திருமணமான தம்பதியினர் தனது இல்லற வாழ்வில் காதலும் அனுசரித்தும் வாழ்ந்து வருகிறார்கள். கணவனுக்கு வேலையில் உயர்பதவியும் அதன் மூலம் இலண்டனில் இருக்கும் நிறுவனத்துக்கு இடம்பெயர இருப்பதால் தனது உறவினர்கள் நண்பர்கள் தன்னுடன் வேலைப்பார்க்கும் ஊழியர்களை அழைத்து சிறியதாக ஒரு இன்பவிழா அதான் கெட் டூ கெதர் பார்ட்டி வைக்கிறார். அப்போது ஒரு அழைப்பு வருகிறது அந்த அழைப்பின் மூலம் தனக்கு கிடைத்த வேலை வேறொருவருக்கு வழங்கப்பட்டது அதுவும் சில கார்ப்பரேட் அரசியல் மூலம் என்பது தெரிய வருகிறது. அப்போது கோபத்தின் உச்சத்தில் இருந்த தனது கணவனை சண்டை வேண்டாம் என்றும் சமாதானம் செய்து தனது கணவனை இழுக்கும் போது அவன் தன்னை அறியாமல் மனைவியை அனைவரின் முன்பும் ஒரு அறை விடுகிறார். அந்த அறை எதார்த்தமாக விழுந்தது தான் ஆனால் அதை அப்பெண் தனது சுயமரியாதை சீண்டல்களுக்கு உள்ளானது என்று கூறி விவாகரத்து பெற செய்கிறது . 

இப்படத்தில் மருமகள் மற்றும் மாமியார் இடையேயான ஒரு உரையாடல் காட்சி  மிகவும் மனதை உருக்கும் விதமாக அமைந்தது. உங்களுக்கு உங்கள் பையனின் மனைவியை தான் பிடித்து இருக்கிறது என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று இப்போது தான் தெரிகிறது என்ற வசனம் படக்காட்சி உடன் பார்க்கும் போது சற்று நம்மையும்  அறைந்த மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது. இப்பெண்ணின் விவாகரத்து வழக்கை ஏற்று நடத்தும் வக்கீலாக வரும் பெண் கதாபாத்திரமும் சரி வீட்டில் வேலை பார்க்கும் பெண் மாமியாராக வரும் பெண் பக்கத்து வீட்டு பெண் தாயாக வரும் பெண் தம்பியின் காதலியாக வரும் பெண் என்று சமூகத்தில் பல்வேறு வயதில் இருக்கும் பெண்களில் ஒருவராக இவர்களின் கதாபாத்திரங்கள் பேசப்பட்டு இருந்தது.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் அவர்களுக்கிடையே இருக்கும் ஒப்பந்தம் என்பது கண்ணாடியை போன்றது தான். ஒரு முறை உடைந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வராது. வந்தாலும் பழைய பிம்பத்திற்கு பதிலாக பல பிம்பத்தை காட்டும் என்பதே நிதர்சனம். அன்னிய நாட்டினர்கள் நமது கலாச்சாரத்தை விரும்பி பின்பற்ற முயற்சி செய்து வருகிறார். ஆனால் நாம் அன்னிய கலாச்சாரத்தை பின் பற்றவே நினைக்கின்றோம். உறவுகளில் ஊடல் இருக்கலாம் சுயமும் இருக்கலாம் இன்பமும் இருக்கலாம் ஆனால் அதை எல்லாத்துக்கும் மேலாக விட்டு கொடுத்து போகும் தன்மையே உறவை வலுப்படுத்தும் என்பதை மறந்து விடுகிறோம். ஆனால் இங்கு யார் விட்டு கொடுத்து போவது என்பதே பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இப்படத்தில் தான் தவறுதலாக அறைந்ததற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்டு இருக்க மாட்டார். இந்நிலையில் மனைவி தனது கருவை சுமக்கிறாள் என்று தெரிய வரும் போதும் தன்னுடன் இயல்பு வாழ்க்கையை வாழ அழைக்கிறார். இருந்தும் தாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆணாதிக்கம் வெளிப்பாடாக இருப்பார். இறுதியில் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் நாம் நண்பர்களாக இருக்கலாம் அடிக்கடி சந்திக்கலாம் முதலில் இருந்து நம் வாழ்க்கையை துவங்கலாம்  என்று கூறுவார். ஆனாலும் சுயமரியாதை சீண்டப்பட்டதால் மீண்டும் அந்த உறவை புதுப்பிக்க அப்பெண்ணால் இயலவில்லை. எல்லா நேரங்களிலும் பெண்கள் தான் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்ற வரைமுறையை உடைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குநர் சின்ஹா. 

உறவுகளுக்கு இடையே டொமஸ்டிக் வைலன்ஸ் என்பது கூடாது. இப்படம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. காரணம் ஒரு அடிக்கு விவாகரத்து என்றால் நம் நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் நீதிமன்றத்தில் தான் இருக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட கருத்து இங்கு எல்லா ஆண்களும் தவறானவர்களும் இல்லை எல்லா பெண்களும் சரியானவர்களும் இல்லை என்பதை எனது குரு எனக்கு உணர்த்தியது தான் நினைவுக்கு வருகிறது. தற்காலிக பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவு எடுப்பது நமது முட்டாள்தனத்தையும் மனமுதிர்ச்சியின்மையையும் வெளிப்படுத்தும். 

அன்பும் அறனோடும் உடைத்தாயின் இவ்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. ( குறள் - 45 )

எந்த உறவாக இருந்தாலும் புரிதல் இருந்தால் மட்டுமே நீண்ட நெடுந்தூரம் ஒன்றாக பயணிக்க இயலும். உங்களின் அன்பானவர்களின் கோபத்தையும் சந்தோஷத்தையும் ஊடலையும் பிரிவையும் புரிந்து கொண்டாலே இங்கு உறவுகளுக்குள் பிளவு ஏற்படாது. அன்பு தொல்லையாக தான் இருக்கும் சில நேரங்களில் எரிச்சலையும் ஏற்படுத்தும் அதன் உச்சத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் கோப வார்த்தைகளையும் உங்களின் மனநிலையையும் புரிந்து கொண்டு சில காலம் மேற்கொள்ளப்படும் இடைவெளி என்பது சிறியதாக மட்டுமே இருக்கும். அந்த இடைவெளியிலே நம்மையும் நம் உறவையும் புரிந்து கொள்ள நமக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து சில மாற்றங்களுடன் அதைவிட பன்மடங்கு அன்புடன் அந்த உறவு தொடர்ந்திட வேண்டும். தொடரவும் முடியும். 

#தப்பட் ஆண் பெண் இருவருக்கும் சரிபாதி உரிமை உண்டு என்பதை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால் விவாகரத்து முடிவு மட்டும் சற்று தள்ளி வைத்து யோசித்து பார்க்க வேண்டிய ஒரு செயல். அன்பானவர்களிடம் சுயமிழந்து இருப்பதும் பேரன்பின் வெளிப்பாடு தான் என்பதை புரிந்து கொண்டாலே இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும். அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். 

பின் குறிப்பு: இன்று ஆணாதிக்கம் என்பது குறைந்து வருகிறது என்பது உண்மையே.

மீண்டும் ஒரு நல்ல கதைக்களம் அமையப்பெற்ற படத்துடன் சந்திக்கின்றேன். (நல்ல கதைக்களம் உள்ள படங்களை கருத்துரையில் குறிப்பிடவும்) கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம் தொடரும். 

வைசாலி செல்வம்.


No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...