இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்தது. ஆனால் மனிதனின் மனமோ மிகவும் குறுகிய வட்டத்திலே இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாளுமே கற்றுக் கொள்கிறோம் அல்லது கற்றுக் கொடுக்கப்படுகிறது வாழ்க்கையின் முக்கியத்துவமும் எதார்த்தமும் வழியும் வலியும் சிரிப்பும் அழுகையும் அக்கறையும் வெறுப்பும் இப்படி இரண்டு பக்கப் பாடத்தை அகமும் புறமும் எனப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறது சமூகம்.
இந்த உலகம் தனியாக சமூகம் என்ற அடைப்புக்குள் உட்பட்டது இல்லை. நான் நீ மற்றும் நம்மை போன்ற பலரின் கூட்டமைப்புக்குள் தான் சமூகம் உள்ளது. ஆனால் எத்தனை ஆண்டுகளாக நான் நீ என்று பிரித்து, பகைத்து, வெறுத்து, ஒதுக்கி, குறைத்து மதிப்பிட்டு கொள்கிறோம் மனித இனங்களை. கருவறையில் தொடங்கி கல்லறை வரை தான் வாழ்க்கை. அதற்கு இடையில் எத்தனை இழப்புகள் இறப்புகள் மாற்றங்கள் தடுமாற்றங்கள் பரிமாற்றங்கள் என்று எத்தனையோ விஷயங்களை தெரிந்துக் கொண்டும், புரிந்துக் கொள்ள முயற்சி செய்தும், கடந்துச் செல்கின்றோம்.
சிக்னலில் கூட நமக்கு பொறுமை இருக்காது சிவப்பிலே கடந்து விடுகிறோம். அப்படியே தான் இந்த அவசர உலகில் எதையும் நின்று கவனித்து செல்லும் பழக்கம் இல்லை. ஒவ்வொரு சிக்னலும் எனக்கு மிகப்பெரிய பாடசாலையாகவே இருக்கும். பல நேரங்களில் அதுவே ரௌத்திரம் பழகும் இடமாக இருக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபரை சந்தித்தேன் சிக்னலில் அவருடன் எனக்கு உண்டான பந்தம் மிகவும் பொக்கிஷமானது. என்னுடைய தாத்தா சதாசிவம். இப்போது அவர் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். அதற்கு ஈரோடு அக்சயம் அமைப்பு உதவியது. எத்தனை முறை சாலையை கடந்தாலும் அவர் நலமாக இருந்தாலும் அவர் படுக்கும் இடத்தைப் பார்க்கும் போது அவரை தேடாத நாட்கள் இல்லை. என் எண்ணங்கள் தடுமாறும் போது எனது நேரத்தை அவருடன் தான் கழிப்பேன்.
இன்றும் அப்படியே தேடி கடந்தேன். இருந்தார் ஆனால் சதாசிவம் தாத்தா இல்லை. செங்கோட்டையன் தாத்தா. எப்போதும் போலவே இந்த தாத்தாவுடனும் தேநீரை அருந்தி விட்டு பலகாரம் சாப்பிட்டு பேச்சுக் கொடுத்தேன். 85 வயது இவருக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் சம்சாரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். காட்டு வேலை செய்து திருமணம் செய்தார் மாட்டு வண்டி ஓட்டி குடும்பத்தையும் ஓட்டினார் கட்டிட வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து தன்மானத்துடன் இருந்தவர் தான் செங்கோட்டையன் தாத்தா. இன்று அந்த ஐந்து பிள்ளைகளின் வீட்டிலும் இந்த நெளிந்துபோன மனிதனுக்கு படுக்க இடமில்லை என்று வீதிக்கு அனுப்பி விட்டார்கள்.
மகள்கள் வீட்டுக்கு போங்க தாத்தா என்றேன். அது எப்படி போக முடியும் அது சரியாக இருக்காது. மகள்களை கட்டிக் கொடுத்து விட்டேன் அங்கு சென்றால் அவர்களின் வாழ்க்கைக்கு இழிவு வரும் என்றார். சரிங்க தாத்தா உங்க அண்ணன் வீட்டுக்கு போங்க என்றேன். உடனே கண்ணீரை மறைத்துக் கொண்டு சொன்னார். அது எப்படியம்மா எனக்கு மகன்கள் இருக்கையில் அப்படி போனால் அது எனக்கும் எனது மகன்களுக்கும் மரியாதையாக இருக்காது என்று கூறினார். கண்ணும் தெளிவாக இல்லை. எனக்கு வீடு பார்த்து தருகிறேன் என்று எனது மகன்கள் கூறி இருக்கிறார்கள் அது வரை இரவு இங்கு வந்து படுத்துக் கொள்வேன் காலையில் பேருந்து நிறுத்தம் சென்று விடுவேன். ஒரு வேளை சாப்பாடு மட்டும் மகனை கொண்டு வருவான்.எனது பேரப்பிள்ளைகள் ஏன் தாத்தா வீட்டுக்கு வருவதில்லை என்று என்னிடம் கேட்பார்கள் படுக்க இடமில்லை என்று என்னை அனுப்பி விட்டார்கள் என்று கூறுவேன் என்றார்.
நான் யாரிடமும் கை நீட்டிக் காசு கேட்க மாட்டேன். அவர்களே கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்றார். என்னுடன் வாருங்கள் ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறேன் என்று கூறினேன். இல்லை என்னுடைய மகள்கள் என்னை வந்துப் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள் அதனால் அவர்களிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என்றார். அவருடன் பேசும் போது நான் உணர்ந்தது எவ்வளவு துரத்தினாலும் பிள்ளைகளை இன்றும் நேசிக்கிறார். தன்மானத்தை இன்றும் என்றும் எதற்காகவும் இழக்கக்கூடாது என்று கர்வமாக இருப்பதைக் கண்டு உணர்ந்தேன்.
இவரிடம் பேசும் போது ஒன்று கூறினார் இப்படியே வாழ்க்கை சென்றால் கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனது பயணத்தை முடித்துக் கொள்வேன் என்றார். இந்த வார்த்தையை அவரிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. 85 வயதில் எத்தனை அனுபவம் எத்தனை இடர்பாடுகள் எத்தனை விஷயங்களைக் கடந்து இருப்பார். இவ்வளவு பாடமும் அந்த ஒரு வார்த்தையில் முடிவுப் பெற்றுவிட்டது. உயிருடன் இருந்தாலும் உயிரற்ற உடலுடன் பயணிக்கிறார். இவரின் வாழ்க்கை ஆகச் சிறந்த பாடமாக நான் கற்று உணர்ந்தேன்..
இங்கு பகிர்வதன் நோக்கம் விளம்பரமோ பாராட்டுக்கோ வாழ்த்துகளுக்கோ அல்லது எதற்காகவும் இல்லை. பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் வைத்த பெற்றோர்களை நடு ரோட்டில் விட்டு செல்லும் பிள்ளைகளுக்கு தெரியவில்லை அந்த நிலை நமக்கும் வருவதற்கு நீண்ட நேரம் ஆகாது என்பதை மறந்து விடுகிறார்கள்
கடந்த நிமிடங்கள் கணத்து கடந்தது.. அவரின் கண்ணீர் காற்றில் கரைந்துச் சென்றது.. தாத்தாவும் நானும் உரையாடிக் கொண்டதை தங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.. அவரின் ஒப்புதலுடன் நிழற்படம் எடுத்தேன். அவரின் ஒப்புதல் படியே இங்கு பகிர்ந்துக் கொண்டேன். என்னுடைய இந்த பயணம் பிறருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறிய வார்த்தையை சிறிய அளவில் நிறைவு செய்து விட்டேன்.மாற்றம் பிறரிடம் இருந்து எதிர்ப்பாகாமல் தன்னிடம் இருந்து மாற்ற முயல்வோம்.. நல்ல சமூகத்தை விதைப்போம் அறுவடை செய்வோம்..
நன்றி. இணைந்திருங்கள் தொடர்ந்துப் பயணிப்போம். கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..
3 comments:
சிறப்பான பதிவு
தொடருங்கள்
👏👏👏
♥️
Post a Comment