Wednesday 14 April 2021

வாசிப்பது எப்படி ...?

 


#நூல்விமர்சனம் 


நூல் : வாசிப்பது எப்படி 

ஆசிரியர் : செல்வேந்தர் 

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்

பக்கங்கள் : 98

மையக்கரு : நூல் வாசிப்பு, பகிர்வு, அறிவுத் தேடல் 

இந்நூலின் துவக்கம் ஆப்பிரிக்க பழமொழிகளில் ஒன்றான "முயலைப் பிடிக்க நினைத்தால் அதன் பின்னால் ஓடாதே..முயல் எங்கே ஓடும் எனக் கணித்து அங்கே காத்திரு.." என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் இந்நூலாசிரியர் துவங்கியிருப்பார். எழுத்து என்பது பேசுவதை விட வலிமையானது. ஆயிரம் முறை மனப்பாடம் செய்தாலும் ஒருமுறை எழுதினால் மட்டுமே மனதில் பதியும். அவ்வளவு வலிமையான எழுத்துகளை இன்று இருக்கும் இளைஞர்கள் பயன்படுத்துவதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியில் மனித இனம் இழந்த மிகப்பெரிய பொக்கிஷம், நூல் வாசிப்பு என்றால் அது மிகையே. இந்நூலில் வாசிப்பு பற்றி சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகள் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார், நூலாசிரியர். தலைச் சிறந்த தலைவர்கள், முன்னோடிகள் அனைவரும் வாசிப்பின் உதவியால் தான் நன்னிலையடைந்தனர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார். கேட்ஜெட் மீதுள்ள ஆர்வமும் அதற்கு செலவிடும் நேரமும் ஒரு நூல் வாசிப்பில் நம்மால் செய்ய இயலவில்லை என்ற நிலையில் தான் உள்ளோம். வாசிப்பின் மூலம் கற்பனைதிறன், சிந்தனை, ஞாபக ஆற்றல், பேச்சில் வழு, எழுத்தின் திடம்,  தொலைநோக்கு பார்வை என பலகோணத்தில் நம்மால் செயல்பட இயலும் ஆனால் அவற்றை ஒரு குறுகிய வட்டத்தில் சுழச்செய்கிறோம் அதனால் நாம் இழந்துக் கொண்டிருக்கும் பலவற்றை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார் இந்நூலாசிரியர். பல இடங்களில் நேரடியாக தாக்கியுள்ளார்.இல்லை வேள்வி தீயை மூட்டியுள்ளார் என்றுக் கூட சொல்லலாம். இன்றைய இளைஞர்கள் முதல் நாள் வகுப்புக்கு செல்வதைக் காட்டிலும் முதல் நாள் முதல் படக்காட்சிக்கு முதல் ஆளாக சென்று பார்ப்பது தான் வீரம் வெறியன் என்ற மாயப் பிம்பத்தில் வாழ்கிறான் என்பதை உயிரோட்டமாக காட்டியுள்ளார். எந்த ஒரு நடிகரும் நூல் வாசியுங்கள் பகிருங்கள் என்று கூறுவது மிகவும் அரிதான ஒன்று என்பதையும் கூறியுள்ளார். உண்மையே சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் அவர்கள் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் குறிப்பிட்டது வரவேற்கதக்கது. ஆனாலும் ஒரு வாசிப்பாளன் என்பவர் தனது வாசிப்பை நிறுத்தவே கூடாது என்பது தான் சிறந்த வாசிப்புக்கு உதாரணமாக இருக்க இயலும் என்பதை கூறியுள்ளார். வாசிப்புக்கான சில வழிமுறைகளும் விதிமுறைகளையும் நயம்பட எடுத்துரைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு முழு வாசிப்புடன் முடித்த நூலாக இந்நூல் அமைந்தது. வாசிக்கும் போது ஆசிரியருடன் நாமும் பயணிக்க இயலும். அந்த பாதை அந்த பயணம் அந்த அனுபவம் அந்த முடிவு எல்லைகளை கடந்தது. அதனை உணர்வதற்கு தினமும் ஒரு இரண்டு மணிநேரம் அல்லது இரண்டு பக்கங்கள் வாசித்தால் கூட போதுமானது. எப்போது எப்படி வாசிக்கலாம் என்பதை தெளிவாகவும் எளிதாகவும் கூறியுள்ளார். இன்றைய அவசர வாழ்கையில் வாசிப்பு மிகவும் தேவை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை மனிதனாக உணர செய்யும் வல்லமை பெற்றது. வாசியுங்கள் பகிருங்கள். மறக்காம உங்கள் கருத்தை பதிவுச் செய்யுங்கள். 


நன்றி. மீண்டும் ஒரு நூல் விமர்சனத்துடன் தங்களை சந்திக்கிறேன். நூல்கள் பரிந்துரையும் வரவேற்கப்படுகிறது. 


கேள்விக்குப் விடைத்தேடும் பயணம் தொடரும். நம்பிக்கையுடன் வைசாலி செல்வம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விமர்சனம்... வாழ்த்துகள்...

Jose G Benjamin said...

நல்ல ஒரு நூல் விமர்சனம்.... பகிர்ந்த்தமைக்கு நன்றி... இது போன்ற சிறு கட்டுரைகளை படிக்க என்னால் இயலும்...ஆனால் புத்தகங்ககளை படிப்பது ஏனோ எனக்கு கஷ்டம்.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...